January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகரிக்கும் யுக்ரைன் பதற்றம்: பைடன் – புட்டின் பேச்சுவார்த்தை!

File Photo

யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமாக இருந்தால் நட்பு நாடுகளுடன் இணைந்து பதிலடி கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யுக்ரைன் எல்லைகளில் ரஷ்யா படைகளை அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து சனிக்கிழமை ஜோ பைடன், விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான யுக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் யுக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் தமது பிரஜைகளை யுக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்நிலையில், யுக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபருடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, யுக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றனர்.
யுக்ரைன் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறுமாறும் புட்டினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும் ரஷ்யா யுக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும், இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

எனினும் இந்தப் பேச்சு இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்ததாகவே கூறப்படுகின்றது.

இதேவேளை யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இருவரும் மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.