முழுமையாக கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெப்ரவரி 21ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் நாட்டின் எல்லைகள் முழுமையாக திறக்கவுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 2020 மார்ச் மாதம் முதல் அவுஸ்திரேலியா தனது எல்லைகளை மூடியது.
இந்தக் காலப்பகுதியில் அவுஸ்திரேலிய குடிமக்கள், புலம்பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நாட்டின் எல்லைகளை திறப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் முழுமையாக திறக்கும் திகதியை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.