
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் தேசிய அளவில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதை சிஎன்என் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் 54 வீதமானவர்கள் ஜோ பைடனிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.42 வீதமானவர்கள் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே வாக்களித்துள்ளவர்கள் மத்தியில் டிரம்பிற்கு 34 வீத ஆதரவு மாத்திரம் காணப்படுவதையும்,முன்கூட்டியே வாக்களிக்க தீர்மானித்துள்ள இன்னமும் வாக்களிக்காதவர்கள் மத்தியில் 63 வீத ஆதரவுள்ளதையும் இந்த கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 61 வீதமான பெண்களும் 47 வீதமான ஆண்களும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
வெள்ளையின வாக்காளர்களில் 50 வீதமானவர்கள் டிரம்பிற்கும் 48 வீதமானவர்கள் ஜோ பைடனிற்கும் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் ஜோ பைடனிற்கு தேசிய அளவில் அதிக ஆதரவு காணப்படுகின்றது. இது கடந்த காலங்களில் எந்தவொரு வேட்பாளருக்கும் கிடைத்த ஆதரவை விட அதிகம் என சிஎன்என் தெரிவித்துள்ளது.