January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யேமனில் அகதிகள் தடுப்பு முகாம் மீது வான் தாக்குதல்: பலர் பலி!

யேமனில் அகதிகள் தடுப்பு முகாம் மீது சவுதி கூட்டுப்படை நடத்திய வான் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

‘ஹவுத்தி’ கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தடுப்பு மையம் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யேமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ‘ஹவுத்தி’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாலும், சவுதி நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியதாலும், ஹவுத்தி ராணுவ இலக்குகளை குறிவைத்து சவுதி கூட்டுப்படை வான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்படி ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள சாதா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது அங்கிருந்த தற்காலிக தடுப்பு மையத்தில் தங்கியிருந்த தென் ஆப்பிரிக்க அகதிகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தத் தாக்குதலை ஐ.நா கண்டித்துள்ளது.