வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் வடக்கு பியாங்கன் மாகாணத்தில் இருந்து ஜனவரி 14 ஆம் திகதி இந்த ஏவுகணைகள் கடலுக்குள் செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய முப்படை தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 2019 ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்திருந்ததுடன், அதற்கு பதிலாக தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும் அப்போதிருந்த அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், வடகொரியா தங்களது அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்ட பிறகுதான் பொருளாதார தடைகளை நீக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், மீண்டும் அணுஆயுத திட்டங்களை வடகொரியா ஆரம்பித்திருந்தது.
இதன்படி வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகின்றது. அதன் ஒருபகுதியாக ஒலியை விடவும் 5 மடங்கு வேகமான ஏவு கணையை மூன்றாவது முறையாக கடந்த 11 ஆம் திகதி வடகொரிய பரிசோதித்துள்ளது.
அதனை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டித்திருந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி மேலும் இரண்டு ஏவுகணைகளை 11 நிமிட இடை வெளியில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏவுகணைகள் 430 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல்பகுதியில் விழுந்துள்ளதாக தென்கொரிய முப்படை தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.