Photo: Twitter/ Novak Djokovic
உலகின் முதல் நிலை டெனிஸ் வீரரான சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச், அவுஸ்திரெலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது அவர், நாட்டுக்குள் அனுமதிக்கப்படாது அவரின் வீசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொவிட் தடுப்பூசி தொடர்பான ஒழுங்குவிதிகளை அவர் பின்பற்ற தவறியதாக தெரிவித்தே அவருக்கு அவுஸ்திரெலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளமையை உறுதி செய்ய வேண்டும். ஆனால் நொவெக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து அறிவிக்க மறுத்து வந்தார். இதனால் அவுஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதிவிலக்கு கிடைத்து இருப்பதாகவும், இதனால் அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளதாகவும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய விரும்பும் யாராக இருந்தாலும் தேவையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும் என்றும் தடுப்பூசி போடாமல் இருந்தால், அதற்கான தகுதி வாய்ந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் புதன்கிழமை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலைமையில் ஜோகோவிச், புதன்கிழமை இரவு மெல்போர் விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் அவரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதுடன் அவரின் வீசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.