November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் தலை துண்டிக்கப்படும் துணிக்கடை பொம்மைகள்!

File Photo

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான்கள், அங்கு துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலைகளை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 2021 ஆகஸ்ட் முதல் தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.

இதன்போது அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் ஆண் உறவினர் துணை இன்றி வெளியே செல்லக்கூடாது, பொது இடங்களில் உள்ள நீச்சல் தடாகங்களில் பெண்கள் குளிக்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள துணிக் கடைகளில் உள்ள மாதிரி பொம்மைகள் தொடர்பில் அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது எனவும், இதனால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொம்மைகளின் தலைகளை மட்டும் மூடி வைத்தாலோ அல்லது முழு பொம்மையை மறைத்து வைத்தாலோ அவர்களின் கடை மற்றும் வீடுகளில் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து துணிக்கடைக்காரர்கள் பொம்மைகளின் தலைகளை துண்டித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.