வடகொரியாவினால் அடையாளம் தெரியாத ஏவுகணையொன்று கடலுக்குள் செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இது உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் 2022 ஆம் ஆண்டில் வடகொரியாவினால் பரிசோதிக்கப்பட்ட முதலாவது ஏவுகணை பரிசோதனையாக இது இருக்கும் என தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவினால் ஏவுகனையொன்று கடலுக்குள் செலுத்தப்பட்டதாக முதலில் ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை தகவல் வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இது தொடர்பில் தாங்களும் தகவல்களை அறிந்துகொண்டுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனையாக இருக்கலாம் என்றும், ஆனால் அது எந்தவகை ஏவுகணை என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தென்கொரிய பாதுகாப்பு பிரிவினர் தரேிவீத்துள்ளனர்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ய ஐ.நா தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வடகொரியா பரிசோதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் ஏவுகணையால் உலக நாடுகளிடையே அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் வடகொரியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவர் இந்த ஏவுகணை பரிசோதனையையும் செய்துள்ளார்.