
Photo: Twitter/ @PoliceNationale
பிரான்சின் நீஸ் நகரத்தில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரேசி இதனை பயங்கரவாத தாக்குதல் எனத் தெரிவித்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீஸ் நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரேசி மேலும் தெரிவித்துள்ளார்.
பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், முகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த ஆசிரியர் ஒருவரின் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே, இன்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்ஸ் தேசிய சபை ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.