July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் விவகாரம்: அமெரிக்க – ரஷ்ய அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு!

File Photo

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தொலைபேசியில் கலந்துரையாட உள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இருவரும் கலந்துரையாடவுள்ளனர். இதற்கு முன்னர் டிசம்பர் 7 ஆம் திகதி இருவருக்கும் இடையே வீடியோ தொழில்நுட்பம் ஊடாக உரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் இந்த வாரத்தில் அவர்கள் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுக்ரைன் எல்லையில் ரஷ்யா இராணுவ வீரர்களை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, டிசம்பர் 7 ஆம் திகதி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதன்போது, யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுறுவல்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று ஜோ பைடன் கூறியிருந்ததுடன், தம்மீதான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருந்தார்.

தனது படைகள் பயிற்சியின் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்றும், தங்களது மண்ணில் எங்குவேண்டுமானாலும் படைகளை நிறுத்தும் உரிமை தங்களுக்கு உள்ளது என்றும் ரஷ்ய அதிபர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் யுக்ரைன் தொடர்பான பதற்றம் தொடர்ந்தும் நீடிப்பதால் அமெரிக்க – ரஷ்ய அதிபர்கள் அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.