ஆப்கானிஸ்தானில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணங்களில் ஈடுபடக் கூடாது என்று தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இதன்போது அவர்கள் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியிடங்களுக்கு பயணம் செய்யும் பெண்களுக்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இது தொடர்பில் தாலிபான்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், நாட்டுக்குள் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதிகளில் பயணம் செய்யும் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்றும், ஹிஜாப் அணியாத பெண்களை வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.