July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான தடைகளை விதித்தது அமெரிக்கா!

சீனா, மியான்மர், வட கொரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான தடைகளை அமெரிக்கா வெள்ளிக்கிழமை விதித்துள்ளது.

அத்தோடு. சீனாவின் செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான சென்ஸ்டைம் குழுவை அமெரிக்கா தனது பொருளாதார தடுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

மியான்மர் மீதான மனித உரிமை மீறல் தொடர்பான பொருளாதார தடைகளை விதிப்பதில் கனடா மற்றும் ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளன.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க கருவூலத் திணைக்களம், சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனமான சென்ஸ்டைமை “சீன இராணுவ-தொழில்துறை சிக்கலான நிறுவனங்களின்” பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளது.

இதன் விளைவாக குறித்த நிறுவனம் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுத் தடை பட்டியலில் குறித்த நிறுவனம் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர்கள் மற்றும் மனித உரிமைக்கான தன்னார்வ நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, சீனாவின் மேற்குப் பகுதியான ஜின்ஜியாங்கில் பல ஆண்டுகளாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், முக்கியமாக உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சீனா ஜின்ஜியாங் துஷ்பிரயோகங்களை மறுக்கிறது. ஆனால் அமெரிக்க அரசாங்கமும் பல மனித உரிமைக் குழுக்களும் பெய்ஜிங் அங்கு இனப்படுகொலையை நடத்தி வருவதாக  குற்றஞ்சாட்டுகின்றன.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் 100 க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களுடன் இடம்பெற்ற ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகங்களை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ளும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பது தற்போதைய சகாப்தத்தின் “வரையறுக்கும் சவால்” என்று அவர் கூறினார்.