November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2008க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட்டை கொள்வனவு செய்ய நியூசிலாந்தில் தடை!

2008 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு தமது வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை கொள்வனவு செய்ய தடைவிதிக்கும் வகையிலான சட்டத்தை அடுத்த ஆண்டு நியூசிலாந்து நிறைவேற்ற உள்ளது.

அடுத்த தலைமுறைக்கு புகையிலை விற்பனையை தடை செய்வதன் மூலம் புகைபிடிப்பதை முழுமையாக நிறுத்தும் முயற்சியை நியூசிலாந்து மேற்கொண்டுள்ளது.

வியாழன் அன்று நியூசிலாந்தின் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட புகைபிடித்தல் மீதான கடுமையான ஒடுக்குமுறைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ஆயிஷா வெரால் கூறினார்.

இந்த சட்டத்தின் காரணமாக இளைஞர்கள் நிகோடினுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு என ஒடாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேனட் ஹூக் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பலர் இந்த நடவடிக்கை புகையிலைக்கான கறுப்புச் சந்தையை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

நியூசிலாந்தில் பெரியவர்களில் தேசிய புகைபிடிப்போரின் வீதம் 13% உள்ளது. இதனை 2025 ஆம் ஆண்டளவில் 5% ஆகக் குறைக்கும் தேசிய இலக்கை அடைவதில் நியூசிலாந்து உறுதியாக உள்ளது.

புகைபிடித்தல் நான்கில் ஒரு புற்றுநோய்க்கு காரணமாவதாக நியூசிலாந்தின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு சிகரெட் விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை இப்போது 8,000 லிருந்து 500 க்குக் கீழ் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு முதல் புகைபிடிப்பவர்களை அந்த பழக்கத்திலிருந்து விடுபட உதவும் ஒரு வழியாக வாப்பிங்கை நியூசிலாந்து ஏற்றுக் கொண்டுள்ளது.