July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நவீன இயந்திரத்தை பயன்படுத்த சுவிட்சர்லாந்தில் அனுமதி!

வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நவீன இயந்திரத்தை பயன்படுத்த சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகள்  மோசமான நோயால் பாதிக்கப்படுபவர்கள் அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாது தாம் தற்கொலை செய்து கொள்ள விரும்பும் பட்சத்தில் அதற்கு அனுமதிக்கின்றன.

இந்நிலையில் இவ்வாறானவர்களுக்கு உதவும் வகையிலான  இயந்திரத்தை  எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற இலாப நோக்கற்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

எனினும் இந்த கண்டுபிடிப்பு தன்னார்வ கருணைக் கொலையை சட்டபூர்வமாக்குவதற்கும் தற்கொலைக்கு உதவுவதற்கும் எதிரான விவாதங்களை அதிகரித்துள்ளது.

இதன் நிறுவனர் வைத்தியர் பிலிப் நிட்ச்கே, அவரது கருணைக் கொலை செயல்பாட்டின் காரணமாக டொக்டர் டெத் என்று அழைக்கப்படுகிறார்.

காப்சியூல்  வடிவில் இந்த இயந்திரம் தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் வசதியாக அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதனை உள்ளே இருந்து இயக்க முடியும்.

 

உடலில் உள்ள ஒக்சிஜன் அளவை குறைப்பதன் மூலம் உயிரிழக்கும் வகையில் இதன் தொழில்நுட்பம் உள்ளது.

இதன்படி, இந்த இயந்திரத்தின் உள்ளே இருப்பவரின்  உடலில் இருக்கும் ஒக்சிஜன் அளவை 30 நொடிகளில்  21  வீதத்திலிருந்து 1  வீதமாகக் குறைக்கிறது.

அதன் பின்னர் உள்ளே இருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு செல்வதோடு, அடுத்த 5 ஆவது நிமிடத்தில் உள்ளே இருப்பவர் உயிரிழந்து விடுவார் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 2 இயந்திரங்களை மட்டுமே குறித்த நிறுவனம் தயாரித்துள்ளது. மூன்றாவது இயந்திரம் வடிவமைக்கப்பட்டு வருவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,300 பேர் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.