July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலிபான்களின் நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல் முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரிகளின் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த வார தொடக்கத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒகஸ்ட் 15 முதல் ஒக்டோபர் 31 க்கு இடையில் தலிபான்களிடம் சரணடைந்த அல்லது தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட ஆப்கானிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 47 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையும் இந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது முந்தைய அரசு ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த போதிலும் இவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவால் வெளியிடப்பட்ட இந்த கூட்டறிக்கையில் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 19 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த அறிக்கை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் பலவந்தமாக காணாமல் போனவர்கள் பற்றிய அனைத்து வழக்குகளும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.

தலிபான்களின் நடவடிக்கைகள் மூலம் அவர்களை தாம் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையை நிறைவு செய்துள்ளது.