July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஷவேந்திர சில்வா மீதான பயணத்தடையை நீக்குவது குறித்து ஆராயத் தயார்’: பொம்பியோ

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீதான பயணத்தடையை நீக்குவது குறித்து ஆராய அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை இராணுவத் தளபதி மீதான பயணத்தடை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்த சட்ட ரீதியிலான நடைமுறைகள் இப்போதும் நடைபெற்று வருகின்றதாகவும், இதுதொடர்பில் மீண்டும் கவனம் செலுத்த தாம் தயாராக இருப்பதாகவும் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இராணுவத் தளபதி விவகாரத்தில் சட்ட ரீதியாகவும், தொழிநுட்ப ரீதியாகவும் சரியான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தன் மீதான பயணத்தடை குறித்து பொம்பியோவுடனான கலந்துரையாடலில் பேசப்பட இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சரின் நிகழ்ச்சி நிரலில் அவ்விடயம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி இன்று காலை தெரிவித்திருந்தார்.

       ஷவேந்திர சில்வா

இராணுவத் தளபதி மீதான அமெரிக்க பயணத்தடை குறித்து இராஜாங்க செயலாளரிடம் அரசாங்கம் கலந்துரையாட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் பாராளுமன்ற பாராளுமன்றத்தில் வைத்து சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் ஷவேந்திர சில்வா மீது போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து அமெரிக்காவினால் அவருக்கு பயணத்தடையை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.