‘ஒமிக்ரோன்’ எனப்படும் புதிய கொவிட் வைரஸ் மாறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு தமது நாடு தொடர்பில் வெளிநாடுகள் எடுக்கும் தீர்மானங்கள் குறித்து தென்னாபிரிக்கா அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகள் தமது நாட்டை தண்டிப்பது போன்று தாம் உணர்வதாக தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
புதிய கொவிட் வைரஸ் மாறுபாடு அடையாளம் காணப்பட்ட பின்னர் வெளிநாடுகள் தமது நாட்டுக்கு விதிக்கும் பயணத்தடைகள் தொடர்பான தீர்மானங்களை கண்டிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”விஞ்ஞான ஆய்வுகளை வரவேற்க வேண்டும். ஆனால் அதனை காரணம் காட்டி நாடுகளை தண்டிக்கக் கூடாது” என்று தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகள் தமது நாடு தொடர்பில் தடைகளை விதிப்பதானது, விஞ்ஞானபூர்வமான காரணத்தால் அன்றி அரசியல் ரீதியான காரணத்தினாலேயே என்று தாம் கருதுவதாகவும் தென்னாபிரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.