(file photo)
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நிலவிவரும் நிலையில் அங்கு கடும் பஞ்சம் உருவாகும் என தன்னார்வ நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பெற்றோர் சிறுமிகளை மணமகளாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் வயது வந்த மணமகளாக விற்பனை செய்யப்படுவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு உணவுக்காகவும், கடனை அடைக்கவும் பயன்படுத்தியதாக இவ்வாறு தங்கள் சிறுமிகளை மணமகளாக விற்பனை செய்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது வாழ்க்கையை ஓட்ட வேறு ஒன்றும் செய்ய முடியாத துரதிஷ்டமான சூழலில் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் எதிர்காலத்தில் மணப்பெண்களாக விற்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், நாட்டின் 40 மில்லியன் மக்களும் கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.