November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தேசிய முடக்கத்தை அமுல்படுத்தியது ஆஸ்திரியா!

ஐரோப்பா நாடுகளில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரியா மக்கள் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் தேசிய முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது.

இதன்படி நள்ளிரவு முதல், அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்பட்டுள்ளதோடு, ஆஸ்திரியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் எச்சரிக்கைக்கு அமைய, ஆஸ்திரியாவில் தொற்று விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஐரோப்பா நாடுகளில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்படும் புதிய ஒழுங்கு விதிகள் காரணமாக நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, தடுப்பூசி போட்டுக்ககொள்வது, முகக்கவசம் அணிவது மற்றும் இடங்களுக்கான கொவிட் தடுப்பூசி அட்டைகளை கண்டிப்பாக்குவது போன்ற நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் கடுமையாக்கப்படாவிட்டால் அடுத்த வசந்த காலத்தில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் சனிக்கிழமை எச்சரித்தது.

கடந்த வாரம் ஆஸ்திரியா கட்டாய கொவிட் தடுப்பூசியை அறிவித்த முதல் நாடாக பதிவானது. இந்த சட்டம் பெப்ரவரியில் நடைமுறைக்கு வர உள்ளது.