ஆஸ்திரியா நாடு முழுதும் பூட்டுதலை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கொவிட் தொற்றுப் பரவலின் ஐந்தாவது அலையை தவிர்க்கும் முயற்சியாக குறைந்தது 10 நாட்களுக்கு இந்த பூட்டுதல் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதம் குறைவாக உள்ள நிலையில், அங்கு கொவிட் தொற்றாளர்களின் விகிதம் அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில், நவம்பர் 22 முதல் தேசிய முடக்கத்தை அறிவிப்பதோடு, பிப்ரவரி 1 முதல் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என ஆஸ்திரியாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவில் இரண்டு மில்லியன் மக்கள் இதுவரை முழுமையாக கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய விதிகளின் படி, தடுப்பூசி போடாதவர்கள் வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
ஆஸ்திரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அண்டை நாடான ஜெர்மனி தேசிய அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது. அங்கு கொவிட் தொற்றுநோயின் நான்காவது அலை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது ஜெர்மனியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.