September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியான்மாரில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டர் விடுதலை!

(Photo:twitter/Justice For Myanmar)

மியான்மார் சிறையில் இராணுவ நீதிமன்றத்தால் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டர் மூன்று நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

‘ஃபிரான்டியர் மியான்மார்” பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக செயற்பட்ட டேனி ஃபென்ஸ்டர், கடந்த மே மாதம் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டு மியான்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

37 வயதான டேனி, விரைவில் நாடு கடத்தப்பட உள்ளதாக இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

176 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்த ஃபென்ஸ்டர், கடந்த வாரம் இராணுவத்திற்கு எதிராக கருத்துகளை ஊக்குவித்ததற்காகவும், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும் இராணுவ நீதிமன்றத்தால் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

இதற்கு மேலதிகமாக கடந்த வாரம் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் தற்போது விடுவிக்கப்படாதிருந்திருந்தால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

மியான்மாரில் இராணுவம் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சிக்கு வந்த ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கவிழ்த்தியது முதல் அங்கு அமைதியின்மை நிலவி வருகின்றது.

உள்ளூர் கண்காணிப்புக் குழுவின் படி, இராணுவத்திற்கு எதிரான மக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதில் பாதுகாப்புப் படையினரால் 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னர் இராணுவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட டஜன் கணக்கான பத்திரிகையாளர்களில் டேனியும் ஒருவர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி ஒரு அறிக்கையில், மியான்மரில் “அநியாயமாக சிறையில் இருக்கும் மற்றவர்களை விடுவிக்க நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதால், டேனி விரைவில் அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.