ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு கட்ட பல நாடுகள் தடுப்பூசி உருவாக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் முதற்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2ம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தடுப்புமருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக வருகிற ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா அக்லி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.