அலுவலக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஊழியர்களை தொழில் ரீதியாக தொடர்பு கொண்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் போர்த்துக்கல் பாராளுமன்றம் அண்மையில் புதிய தொழிலாளர் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தோடு இந்த புதிய தொழிலாளர் சட்டம் அலுவலகங்களுக்கு செல்லாது வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
கொவிட் தொற்று காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு இந்த புதிய விதிகள் கூடுதல் நன்மைகளை வழங்கும் என போர்த்துக்கலின் சோசலிஸ்ட் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வதில் நன்மைகள் இருப்பதால் அதற்கு ஏற்ப தொழிலாளர் சட்டத்தை மாற்றியமைக்க விரும்புவதாகவும் போர்த்துக்கல் அரசு தெரிவித்துள்ளது.
விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, அலுவலக நேரத்தை தவிர்ந்த ஏனைய நேரங்களில் தொழிலாளர்களைத் தொடர்பு கொள்வதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.
குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, பணியாளர்கள் தனிமைப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் மேலதிகாரிகளை சந்திக்க வேண்டும் எனவும் இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் அல்லது இணைய கட்டணங்கள் போன்ற வீட்டில் ஏற்படும் கூடுதல் தனிப்பட்ட செலவினங்களுக்காக நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் வேலை செய்யாத நேரங்களில் தொழில் ரீதியிலான தொடர்பாடல் வசதிகளை முடக்கும் உரிமையை பணியாளர்களுக்கு வழங்கவும் இந்த சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்த புதிய விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போர்த்துக்கல் அரசு அறிவித்துள்ளது.
அத்தோடு, ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களுக்கு புதிய அபராதங்களை விதிக்கும் வகையில் விதிகள் இயற்றப்பட்டுள்ளன.
மேலும் வீட்டில் ஏற்படும் வேலை தொடர்பான செலவுகளுக்கு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் இந்த புதிய விதிகள் முதலாளிகளை கட்டாயப்படுத்துகின்றன.