July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் ஒரு மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கும் அபாயம்!

ஆப்கானிஸ்தானில் ஒரு மில்லியன் சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 3.2 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களில் 1 மில்லியன் குழந்தைகள் குளிர் காரணமாக இறக்கும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டில் தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து மேற்குலக நாடுகளின் நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது நாட்டின் பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்து வருவதால், பஞ்சம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

குறிப்பாக சுகாதாரத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல சுகாதாரப் பணியாளர்கள் ஊதியம் கிடைக்காமையால் தொழில்களை கைவிட்டுள்ளனர்.

நாட்டின் இரவு நேர வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸுக்கு கீழ் பதிவாகி வருவதால் சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் நோய்களுக்கு ஆளாகுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிறுவர்கள் வார்டுகள் நிரம்பியுள்ளதோடு, ஏழு மாத குழந்தைகளின் தோற்றம் “புதிதாக பிறந்த குழந்தையை விட சிறியது” என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இதுவரை 24,000 சிறார்கள் தட்டம்மை தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களுக்கு தட்டம்மை மரணத்தை ஏற்படுத்தும். இதை விரைவாக சரி செய்யாவிட்டால், இன்னும் பல சிறுவர்களின் மரணத்தை தவிர்க்க முடியாது என கவலை வெளியிடப்பட்டுள்ளது.