சீனா குறித்த கரிசனை மேலும் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், ஜப்பானும் அமெரிக்காவும் திங்கட்கிழமை புதிய கூட்டு ஒத்திகையொன்றை ஆரம்பித்துள்ளன.
கிழக்கு சீன கடல் பகுதியில் ஜப்பானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவுகள் தனக்குரியவை என சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து இராணுவ ரீதியில் பலமாவது என கடந்த மாதம் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ஜப்பானும் அமெரிக்காவும் கீன்சுவோட் என்ற ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.
ஜப்பானின் புதிய பிரதமராக யோசிஹிடே சுகா பதவியேற்ற பின்னர் ஜப்பான் முன்னெடுக்கின்ற முதலாவது பாரிய ஒத்திகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கீன்சுவோர்ட் ஒத்திகையை வழமையாக இரு நாடுகளும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருட ஒத்திகையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க- ஜப்பான் விமானங்களுடன் யுத்த கப்பல்களும் 46,000 படையினரும் பங்கேற்க உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முதல் தடவையாக இம்முறை சைபர் மற்றும் இலத்திரனியல் போர்முறைகள் குறித்த ஒத்திகைகளும் இடம்பெறவுள்ளன.
ஜப்பானை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் ஆபத்தானதாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள ஜப்பானின் இராணுவதளபதி, ஜப்பான்- அமெரிக்க கூட்டணியின் வலுவை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த ஒத்திகை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜப்பானில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதும் அதன் போது பிராந்தியத்தில் சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கம் குறித்து கவனம் செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.