பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் விடயத்தில் வறிய நாடுகளுக்கு பிரிட்டன் 337 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெறும் ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பிரிட்டன் இதனை அறிவித்துள்ளது.
உலகத் தலைவர்களின் கூட்டங்களைத் தொடர்ந்து, பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளின் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தில் வறிய நாடுகளுக்கு எவ்வாறு ஒத்துழைப்பது மற்றும் இயற்கை அழிவுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
பருவநிலை மாற்றத்தால் தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் வறிய நாடுகள் தெரிவித்துள்ளன.
மேலும், வறிய நாடுகள் 100 பில்லியன் நிதியுதவியைக் கோரியுள்ளன.
பிரிட்டனின் நிதியுதவிகளில் அதிகமானவை ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கே சென்றடையவுள்ளன.
பருவநிலை மாற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்தல், குறைந்த கார்பன் பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்ற துறைகளில் தாம் ஒத்துழைக்கவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.