இராக் பிரதமர் முஸ்தபா அல் கதிமியின் வீட்டின் மீது ‘ட்ரோன்’ ஊடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் பாக்தாத்தில் உள்ள பிரதமரின் வீட்டை இலக்கு வைத்து, வெடிபொருட்களை கொண்ட ட’ரோன் ஊடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமர், சிகிச்சையொன்றுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் இத்தாக்குதலில் தாம் எவ்வித காயமுமின்றி தப்பியதாக பிரதமர் அல் கதிமி தெரிவித்துள்ளார்.
தான் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், இராக்குக்காக அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் அல் கதிமி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை ஆதரம் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இராக் ராணுவம், இந்த சம்பவத்தை ‘கொலை முயற்சி’ என குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.