சூடானில் இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து, அங்கு மக்கள் வீதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது போராட்டக் காரர்கள் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை என்று அழைக்கப்படும் கூட்டமைப்பு சூடானை ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த 24 ஆம் திகதி இராணுவ ஜெனரல் அப்தெல் ஃபடாஹ் புர்ஹான்,ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
இதேவேளை இராணுவப் படைப் பிரிவொன்று, பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கையும் நான்கு அமைச்சர்களையும் கைது செய்திருந்தது.
இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக, பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி நேற்று சனிக்கிழமை சூடானின் தலைநகர் கார்டோம் உட்பட பல்வேறு நகரங்களில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிரதமர் அப்தெல்லா ஹம்தோக்கை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஆயிரக் கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.
இதன்போது ஒம்டுர்மன் நகரத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சூடானின் மத்திய மருத்துவர்கள் குழு என்கிற சுயாதீன அமைப்பு கூறியுள்ளது.
இதேவேளை இந்த வாரத்தில் மட்டும் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மத்தியிலான மோதலில் 10 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது சூடான் அதிகாரிகள் இணையம் உட்பட பல்வேறு தொலைத் தொடர்பு வசதிகளைத் துண்டித்துள்ளனர். அதோடு மக்கள் நடமாட்டத்துக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.