
கொவிட்-19 வைரஸின் மூலத்தை ஒருபோதும் அடையாளம் காண முடியாது என அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் கொவிட் வைரஸ் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
வைரஸின் தோற்றம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளின் படி, விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவுதல் மற்றும் ஆய்வக கசிவு ஆகிய இரண்டும் நம்பத்தகுந்த கருதுகோள்கள் என அமெரிக்க தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகம் (ODNI) தெரிவித்துள்ளது.
ஆனால் உறுதியான முடிவுக்கு வர போதுமான தகவல்கள் இல்லை எனவும் பணிப்பாளர் அலுவலகம் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள், ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட 90 நாள் மதிப்பாய்வின் பின்னரான அறிக்கையில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை விமர்சித்து சீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வுகான் நகரில் கொவிட்-19 தொற்று ஆரம்பமாவதற்கு முன், சீன அதிகாரிகளுக்கு வைரஸ் இருப்பது பற்றி தெரியாது என்றும் அந்த அறிக்கை கூறியது.