February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துருக்கி ஜனாதிபதியின் கருத்தினால் பிரான்ஸ் சீற்றம்; தூதுவரை அவசரமாக அழைத்தது

பிரான்ஸ் ஜனாதிபதியை சீண்டும்வகையில் துருக்கி ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினால் கடும் இராஜதந்திர மோதல் உருவாகியுள்ளதுடன், துருக்கிக்கான தனது தூதுவரை பிரான்ஸ் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

பிரான்சில் மதச்சார்பற்ற விழுமியங்களை பேணப்போவதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக போராடப்போவதாகவும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

முகமது நபியின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காண்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்தே மக்ரோன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், மக்ரோன் என்ற தனிநபருக்கு இஸ்லாத்துடனும் முஸ்லீம்களுடனும் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பியுள்ள அதேவேளை,மக்ரோனிற்கு மனோநிலை சிகிச்சை தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து பிரான்சில் கடும் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.துருக்கி ஜனாதிபதியின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என பிரான்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.