File Photo
பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை வடகொரியா எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் குறைவாக சாப்பிடுங்கள் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன், மக்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐநாவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அத்துடன் கொவிட் தொற்று காரணமாக கடந்த வருட ஆரம்பம் முதல் வடகொரிய தனது எல்லைகளை மூடி உள்ளது. மேலும் சீனாவில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா நிறுத்தியது.
இதனால் அங்கு உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1994-1998 காலப்பகுதியில் நிலவியதை போன்ற கடுமையான உணவு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலைமை 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன், சில தீர்மானங்களை எடுத்துள்ளார். அதன்படி குறைவாக சாப்பிடுமாறு அவர் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
“தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. வர இருக்கும் குளிர்காலத்தில் எங்களால் வாழ முடியுமா என்பது தெரிய வில்லை. 2025-ம் ஆண்டு வரை கஷ்டங்ளை சகித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது எங்களை பட்டினி கிடந்து சாகச்சொல்வதற்கு சமம்” என்று அந்நாட்டு மக்கள் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.