(Photo : Twitter/Rick Telberg)
சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ‘சீனா டெலிகொம்’ தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையை அடுத்த 60 நாட்களுக்குள் நிறுத்தும் படி அமெரிக்கா அறிவித்துள்ளது.
“தேசிய பாதுகாப்பு” குறித்த அச்சம் காரணமாக இவ்வாறு சீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையை ரத்து செய்ய தீர்மானித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெல்லன், சீனாவின் துணைப் பிரதமர் லியூவுடன் சர்வதேச பொருளாதாரம் குறித்து பேசியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த நிறுவனத்தின் மீதான தமது ஆதிக்கத்தை பயன்படுத்தி, அமெரிக்க தொலைத் தொடர்புகள் குறித்த தகவல்களை சீன அரசு பெற்றுக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்க்கும் சதி மற்றும் பிற தீங்கான நடவடிக்கைகளுக்கு வித்திடும் என அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாகவும் தமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையளிக்கும் அனைத்து வழிகளையும் தாம் ஆராய்ந்து வருவதாகவும் சீன டெலிகொம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களாக தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வந்த சீனா டெலிகொம் நிறுவனம் சீனாவின் தொலைத் தொடர்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மூன்று நிறுவனங்களில் ஒன்று ஆகும்.
உலகின் 110 நாடுகளில் இந்த நிறுவனம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குகிறது. பல லட்சம் பேர் இந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிகின்றனர்.
இதே காரணத்திற்காக அமெரிக்காவின் மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்யப் போவதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.