July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடும் உணவு நெருக்கடியில் ஆப்கானிஸ்தான்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை!

ஆப்கான் மக்கள் கடுமையான உணவு நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக ஐநாவின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் வாட நேரிடும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்கள் வசமானது. இதனையடுத்து, ஏற்கெனவே நலிவடைந்த பொருளாதாரம் மேலும் பலவீனமானது. வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டன. சர்வதேச செலாவணி நிதியமும் உதவியை நிறுத்தியது.

இவ்வாறான நிலைமையில் அங்கு பெரும் உணவு நெருக்கடி நிலைமை ஏற்பட்டு, உணவுக்காக மக்கள் தமது சொத்துக்களை விற்கும் நிலைமை உருவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள மக்கள்தொகையில் 2.28 கோடி பேர், உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள அதேநேரம், ஐந்து வயதிற்குட்பட்ட 32 இலட்சம் குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் நிலைமையும் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு உதவிகள் கிடைக்காத காரணத்தினால் தாலிபான் அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது ஆப்கானிஸ்தான் பெரும் நெருக்கடியான நிலைக்கே கொண்டு செல்லும் என்றும், இந்தவிடயம் தொடர்பில் அவசரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.