November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு: பிரதமர், அமைச்சர்கள் கைது!

சூடானில் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வரும் இராணுவத்தினர், அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட இடைக்கால அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரை கைது செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை என்று அழைக்கப்படும் கூட்டமைப்பு சூடானை ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த செப்டம்பரில் இராணுவப் புரட்சியொன்றின் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்து, அந்த முயற்சியை தோற்கடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு அரசியல் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலைமையில், இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இவ்வாறான நிலைமையில், திங்கட்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத இராணுவப் படைப் பிரிவொன்று, பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கையும் நான்கு அமைச்சர்களையும் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தக் கைதானது கூட்டு இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அந்நாட்டு தகவல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை தலைநகரான கார்தூமில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது அங்கு வீதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.