சீனாவில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் 11 மாகாணங்களில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவருமே டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் நான்ஜிங் கொரோனா பரவலுக்குப் பின்னர் ஏற்பட்ட பரவலாக இது கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பீஜிங் மரதன் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
30,000 பேர் வரை பங்கேற்கவிருந்த மரதன் போட்டி ஒக்டோபர் 31 ஆம் திகதி நடக்கவிருந்தது. இந்நிலையில் தற்போதைய கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு அதனை ஒத்தி வைக்க நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1981ஆம் ஆண்டு முதல் பீஜிங் மரதன் நடத்தப்பட்டு வருகிறது. இது சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.