November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொலம்பியாவில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த குற்றக் கும்பல் தலைவன் டைரோ கைதனார்!

Photo: Twitter/ Ivan Duque

கொலம்பியாவில் அதிதீவிரமாகத் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரரும் அந்நாட்டின் மிகப் பெரிய சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவருமான டைரோ ஆன்டோனியோ உசுகா கைது செய்யப்பட்டுள்ளார்.

தரைப்படை, விமானப் படை ஆகியன இணைந்து சனிக்கிழமை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட மேற்கு கொலம்பியாவில் பனாமா நாட்டு எல்லையில் உள்ள ஆன்டியோகுயா மாகாணத்தில் பதுங்கியிருந்த போது இவர் பிடிபட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

50 வயதான டைரோவைப் பிடிக்கவென நீண்ட காலமாக ஆயிரக் கணக்கான அதிகாரிகளைக் கொண்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அவர் யாரிடமும் சிக்காது பதுங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் இவரைப் பற்றி தகவல் கொடுப்போருக்கு எட்டு இலட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கொடுப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அத்துடன் அமெரிக்காவும் இவர் தலைக்கு ஐந்து மில்லியன் டொலரை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலைமையில், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில் அவர் சிக்கியுள்ளார். இவர் கைதானதை தொடர்ந்து, கொலம்பியாவின் ஆயுதமேந்திய படையினர் சூழ, கையில் விளங்கிட்டு பாதுகாப்பாக அழைத்து வரும் வீடியோ மற்றும் படங்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை டைரோ ஆன்டோனியோ உசுகா கைது செய்யப்பட்டது குறித்து கொலம்பியாவின் அதிபர் இவான் டுகேவே, அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரை பாராட்டியுள்ளார்.