November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா உட்பட 10 நாடுகளின் தூதுவர்களை வரவேற்கப்படாத நபர்களாக அறிவித்தார் துருக்கி அதிபர்!

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளின் தூதுவர்களை வரவேற்கப்படாத நபர்களாக, துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் அறிவித்துள்ளார்.

எஸ்கிஷேஹிரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், குறித்த 10 நாட்டு தூதுவர்களும் வரவேற்கப்படாத நபர்களாக உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இது குறித்து வெளி விவகாரத் துறை அமைச்சருக்கு தேவையான உத்தரவுகளை வழங்கியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

இதன்படி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் துருக்கியில் தூதுவர்களாக அங்கீகரிக்கப்படாமல் போகலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த 10 நாடுகளின் தூதுவர்களும், சிறையில் உள்ள துருக்கி மனித உரிமை செயற்பாட்டாளரான ஓஸ்மான் கவலாவை விடுதலை செய்யவேண்டும் என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையிலேயே, அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

”தூதுவர்கள் துருக்கியைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது வெளியெற வேண்டும்” என எர்துவான் கூறியதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை இது தொடர்பாக அந்நாட்டு தூதுவர்களிடமிருந்து பெரிய எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஜெர்மனியின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் கூறியுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் துருக்கி அதிகாரிகளிடமிருந்து வெளியாகவில்லை.

தங்கள் நாட்டு தூதர் வெளியேற்றப்படும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்று நோர்வே கூறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.