கொரோனா வைரசினால் 250,000 க்கும் அதிகமானவர்கள் ஐரோப்பாவில் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தனது புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது;
பல ஐரோப்பிய நாடுகள் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்ததாக அறிவித்துள்ள நிலையில், வியாழக்கிழமை ஐரோப்பாவில் 200,000 பேர் பாதிக்கப்பட்டனர் என புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரசினால் சர்வதேச அளவில் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகளில் 19 வீதமான மரணங்கள் ஐரோப்பாவிலேயே இடம்பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்புகளை பொறுத்தவரை 22 வீதமானவர்கள் ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பதிவான 250,000 மரணங்களில் அதிகமானவை பிரிட்டன்,இத்தாலி பிரான்ஸ், ரஷ்யா, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
ஐரோப்பாவில் ஐக்கிய இராச்சியத்திலேயே அதிகளவாக 45,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில் இடம்பெற்ற மரணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரஷ்யாவில் நாளாந்தம் 250 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்திலும் பிரான்சிலும் கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாளாந்தம் 143 பேர் உயிரிழக்கும் நிலை காணப்பட்ட அதேவேளை,பிரான்சில் நாளாந்த உயிரிழப்பு கடந்த பத்து நாட்களில் அதிகரித்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.