பிரிட்டன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாடல்ல என்று அயர்லாந்தின் பிரதி பிரதமர் லியோ வரத்கார் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுடன் வர்த்தக உறவுகளை வைத்துள்ள நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 2019 ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் கிழித்தெறிய விரும்புகிறது என்று போரிஸ் ஜோன்சனின் முன்னாள் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
டொமினிக் கம்மிங்ஸின் கருத்து பிரிட்டன்- அயர்லாந்து உறவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரெக்சிட் ஒப்பந்தத்தை செயற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தே, போரிஸ் ஜோன்சன் ஆட்சிக்கு வந்தார்.
பிரிட்டனுக்கும் வட அயர்லாந்துக்கும் இடையே பொருட்களை சுதந்திரமாக விநியோகிக்கும் விதமாக பிரெக்சிட் ஒப்பந்தத்தை மாற்றுவதற்கு பிரிட்டன் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தத்தை மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையிலேயே, பிரிட்டனின் முன்னெடுப்புகளை அயர்லாந்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.