January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்களான டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றில் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பகுப்பாய்வு செய்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பிலிப்பைன்ஸை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராட்டா ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு 8 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (11) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.