November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள மேற்கு பசுபிக்கிற்கு கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா

மேற்கு பசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்களை பயன்படுத்தவுள்ளது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை பசுபிக்கிற்கான சக்தி என வர்ணித்துள்ள அவர், சீனாவின் அறிவிக்கப்படாத ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கை,இந்தோ பசுபிக்கில் உள்ள ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களில் செயற்படும் கடற்கலங்களை துன்புறுத்தும் செயற்பாடுகள் போன்றவை எங்கள் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், எங்கள் பசுபிக் அயல் நாடுகளின் இறைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீயநோக்கங்களை கொண்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு எல்லை பாதுகாப்பு கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தென் பசுபிக்கில் உள்ள பகுதிகளில் கடலோர கண்காணிப்பு கப்பல்களை நிரந்தரமாக நிலை கொள்ளச்செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மைக் பொம்பியோவின் ஆசிய விஜயத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

திங்கட்கிழமை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜோன் எப்சருடன் இணைந்து ஆசியாவிற்கான விஜயத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆரம்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.