கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு சிக்கி தவிக்கும் லெபனானில் இன்று (09) நண்பகல் முதல் மின்சார விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டின் டீர் அம்மர் மற்றும் தெர்மோ எலக்ட்ரிக் ஆகிய இரண்டு பெரிய மின் நிலையங்கள் இயங்குவதை நிறுத்தியதையடுத்து இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின் தடை சில நாட்களுக்கு அல்லது குறைந்தது திங்கட்கிழமை வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18 மாதங்களாக லெபனான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதையடுத்து கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. லெபனான் நாணயம் 2019 முதல் 90% வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலைமை நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேரை வறுமையில் தள்ளியுள்ளதோடு, அரசியல்வாதிகளுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் தூண்டியது.