
ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றுக்கு விரோதமாக போலந்தில் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து முறுகல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
இந்த நிலை போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் தீர்மானம் வரை சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான தீர்மானம், ‘உண்மையான ஆபத்து’ என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
உறுப்பு நாடுகள் பொது மதிப்புகள் மற்றும் விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
போலந்துக்கு எதிரான முழுப் பலத்தையும் பிரயோகிப்போம் என்று ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
போலந்து மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மைகளை வழங்குவதே தமது எதிர்பார்ப்பு என்று ஐரோப்பிய ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.