November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா பாதுகாப்புச் சபை மீது வடகொரியா குற்றச்சாட்டு!

புதிய ஏவுகணை பரிசோதனை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என, வட கொரியாவின் வெளிவிவகார அமைச்சின் சர்வதேச விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜோ சொல் சூ தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் புதிய ஏவுகணை பரிசோதனை தொடர்பில் ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள், நேர வெடிகுண்டு மூலம் விளையாடுவதாக வட கொரியாவை குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ பயிற்சிகள் குறித்து மௌனம் சாதிக்கும் ஐநா பாதுகாப்பு சபை, தமது நாட்டின் ஏவுகணை பரிசோதனை தொடர்பில்  விமர்சிப்பதாக வட கொரியா விமர்சித்துள்ளது.

ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஏவுகணையை தாம் வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக வட கொரியா கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது.

‘ஹவாசாங்- 8’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை, ஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்வதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் 5 வருட இராணுவ மேம்படுத்தல் திட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரதான ஏவுகணைகளில் ஒன்றாக ‘ஹவாசாங்- 8’ கருதப்படுகிறது.

குறித்த ஏவுகணையை வட கொரியா ‘மூலோபாய ஆயுதம்’ எனக் குறிப்பிட்டாலும், அது அணுவாயுத திறன் கொண்டதாகும்.

வட கொரியாவின் இடைவிடாத ஏவுகணை பரிசோதனையால் பிராந்தியத்தில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.