July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் மோசடிக் குற்றத்திற்காக பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஓராண்டு சிறை தண்டனை!

Photo : twitter/Nicolas Sarkozy

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்கோசிக்கு ஒருவருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் மோசடி குற்றாச்சாட்டு தொடர்பிலேயே இவருக்கு இந்தச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிக்கோலஸ் சார்கோசி, 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்ததுடன், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

குறித்த தேர்தலில் நிக்கோலஸ் சார்கோசி, தேர்தல் பிரச்சாரத்திற்காகா சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகச் செலவு செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.

இதுதொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடத் தேர்தலில் அதிகம் செலவு செய்தமை தொடர்பில் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய நீதிமன்றம்,  அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே 2021 மார்ச் மாதத்தில் மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் நிக்கோலஸ் சார்கோசிக்கு எதிராக நீதிமன்றம் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையிலேயே இவருக்கு மீண்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்துக்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவரின் வழக்கறிஞர் தியரி ஹெர்சாக், இந்தத் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.