ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை, மற்றும் அவயவங்களை வெட்டுதல் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த போவதாக சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முல்லா நூருதீன் துராபி தெரிவித்தார்.
“எங்கள் சட்டங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை எனவும் இந்த தண்டனைகள் “பாதுகாப்பிற்கு அவசியம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் 1990 களுக்கு முந்தைய தாலிபான்களின் ஆட்சியை போன்று இந்த தண்டனைகள் பொது வெளியில் வழங்கப்படாமல் இருக்கலாம் எனவும் முல்லா நூருதீன் துராபி, நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முல்லா நூருதீன் துராபி தலிபானின் பிரபல முன்னாள் மதக் காவல்துறைத் தலைவராக செயற்பட்டவராவார்.
ஒகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த தலிபான்கள் தங்கள் முந்தைய ஆட்சியை விடவும் பொது மக்களுக்கு நன்மையான ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்தனர்.
எனினும் அதன் பின்னர் நாடு முழுவதும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்பான தலிபான்களின் செயற்பாடுகள் குறித்து பல தகவல்கள் வந்துள்ளன.
ஹெராட்டில் உள்ள தலிபான்கள் “பெண்களைத் தேடுவதாகவும், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நடமாடும் சுதந்திரத்தை மறுப்பதாகவும் கட்டாய ஆடைகளை அணிய நிர்ப்பந்திப்பதாகவும்” வியாழக்கிழமை, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.