தென் ஆபிரிக்க தலைநகர், கேப் டவுனை அண்மித்த கடற்கரையில் தேனீக்கள் கொட்டியதில் 63 அரியவகை பென்குயின்கள் உயிரிழந்துள்ளன.
வெள்ளிக்கிழமை (17) காலை சைமன் டவுன் என்ற சிறிய நகரத்தின் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பென்குயின்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் உயிரிழப்புக்கு தேனிக்களின் தாக்குதலே காரணம் என அவற்றின் உடலை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தெரிய வந்துள்ளதாக கடலோர பறவைகள் பாதுகாப்புக்கான தென்னாபிரிக்க அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பென்குயின்களின் கண்களை சுற்றி தேனீக்கள் கொட்டிய காயம் காணப்பட்டதாகவும் சம்பவ இடத்தில் பல தேனீக்கள் உயிரிழந்திருந்ததாகவும் குறித்த அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.
இது ஒரு அரிய நிகழ்வு என தெரிவித்துள்ள கடலோரப் பறவைகள் பாதுகாப்புக்கான தென்னாபிரிக்க அறக்கட்டளை, தொடர்ந்தும் பென்குயின்கள் இறப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில் தென்னாபிரிக்காவில் வாழும் பென்குயின்களின் எண்ணிக்கை 73% வீதத்தால் குறைந்துள்ளது.அதாவது 10,400 ஜோடிகளாக குறைந்துள்ளதாக தென்னாபிரிக்காவின் கடலோரப் பறவைகள் பாதுகாப்பு அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டது.