April 30, 2025 21:02:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

File Photo

ஐநா சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமெரிக்கா நியூயோர்க் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

‘கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நாடுகள் பலவற்றின் அரச தலைவர்கள் நியூயோர்க் சென்றுள்ளனர்.

நியூயோர்க் நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு ஐநா தலைமை அலுவலகத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதில் முதலாவதாக பிரேஸில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதுடன் அவரைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

அத்துடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நாளைய தினம் உரையாற்றவுள்ளார்.

நியூயோர்க் நேரப்படி நாளை முற்பகல் 11 மணிக்கு அவர் அங்கு உரையாற்றுவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கொள்ளவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.