November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விண்வெளிக்கு சுற்றுலா சென்றவர்கள் வெற்றிகரமாக பூமி திரும்பினர்

Photo: Twitter/SpaceX

விண்வெளி வரலாற்றில் முதற்தடவையாக விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த குழுவினர் வெற்றிகரமாக தமது பயணத்தை முடித்துக்கொண்டு, மூன்று நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

விண்வெளி வீரர்கள் அல்லாதவர்கள் விண்வெளிக்குச் சென்று வருவது இதுவே முதல் முறையாகும்.

விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லும் ‘இன்ஸ்பிரேஷன் -4’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமையன்று அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்கலம் மூலம், கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினர் விண்ணுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு நான்கு பேருக்கும் சேர்த்து மொத்தமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாக டைம் இதழ் கூறியுள்ளது.

விண்வெளிக்கு பயணமான இவர்கள், பூமியில் இருந்து 575 கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை சுற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாட்களின் பின்னர் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இவர்கள், புளோரிடா நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு பூமிக்கு திரும்பியுள்ளனர்.

இவர்களின் விண்கலம் பூமியை நெருங்கும் போது, நான்கு பாராசூட்கள் மூலம் விண்கலத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக வேகத்தை குறைத்து விண்கலம், பாதுகாப்பாக அட்லாண்டிக் கடலில் விழுந்தது.

இதனை தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் படகுகுகள் மூலம் விண்கலத்தில் இருந்தவர்கள் நிலத்தை வந்தடைந்தனர்.