பருவநிலை மாற்றம், காற்று மாசடைதல் மற்றும் இயற்கை அழிவுகள் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்செலெட் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து, உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பருவநிலை மாற்றம் உட்பட சூழலியல் அச்சுறுத்தல்கள் தீவிரமடையும் போது, அவை மனித உரிமைகளுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரது எதிர்கால நலன்களையும் கருத்திற்கொண்டு, பருவநிலை மாற்றங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பச்செலெட் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக ஐநா இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சட்டபூர்வமானவை அல்ல என்றாலும் அரசியல் ரீதியான தாக்கம் கொண்டவை என்று இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.